Wednesday, October 16, 2013

சிற்றாறு

நெத்தியில கை வெச்சு அன்னாந்து பாக்குது ராக்காயி கெழவி. வடக்க இடிஞ்சு விழுந்துரும் கணக்கா தொங்கி நிக்குது கரு கருன்னு மேகம். கருக்கல்ல வயலுக்கு போன கிழவன் இன்னும் வீடு வரல. ஓன்னு மழை பெஞ்சா ஒதுங்க கூட இடம் இல்ல. இளந்தாரி வயசா இது. வாய்க்குள்ள முனுமுனுகுரா  ராக்காயி. இந்த வருஷம் வெல்லாம வந்தா நாயகர் கிட்ட வாங்கின 20000 த என்குடாச்சும் பொரடிரலாம் - இது பொன்னுசாமியின் மன ஓட்டம். நேத்து நடுப்பட்டி போயிருந்தேன் J13 நாத்த வெச்சுக்கிட்டு ஆடுதுரைன்னு அளந்து விட்ராய்ங்க போடா நீயும் உன் நாத்தும்னு சொல்லிட்டு வந்துட்டேன் - இது பெரியமாயி பேசிக்கிட்டு போறது. ஊரே ஒளவும் நடவுமா ஓடிக்கிட்டு கிடக்கு. வடக்க மழை பெஞ்சா சித்தாறு பெருகி கம்மாய்க்கு தண்ணி வரும். போன வருஷம் வந்த தண்ணியே கம்மாயகுள்ள கொஞ்சமதான் வந்துச்சு. கம்மாய்க்கு உள்ள வர மடய்ல கொஞ்சம் மணல் மேடு தட்டிருசுனு ஒசந்த நாயகரு சொல்லிட்டு  போனாரு. வந்த தண்ணியையும் ரெண்டு மடயையும் புடிங்கி விட்டு காலி பன்னிட்டானுங்க கட கோடில நிலம் வெச்சுருகர வேலப்பன் வகையறா. மடைய அடசுருகர மண்ணை PWD ல சொல்லி அல்லிரலாம்னு சொன்னான் நம்ம கந்தபிள்ளை மகன் குமாரு. எத்தனையோ சொல்லியும் இன்னும் ஒரு பிடி மண்ணு கூட அல்ல முடியல. ரெண்டு மழைதண்ணி விழவும் எல்லாத்தையும் மறந்து ஊரு சனமே உலுக ஆரம்பிச்சுருச்சு. "எங்க தாத்தா சடமாய தேவர் காலத்துல ஒரே மட தாம்பா. கெலகால சுடுகாட்டு காட்லெர்ந்து மேக்க பெரிய வாய்கா தாண்டியும் பாயும். 3 மாசம் நிக்கிற தண்ணி இனிக்கு 2 மாத்தில ஓடிருது" இது கிழக்குத் தெரு முருகனின் முனுமுனுப்பு. எப்பா இம்புட்டு பேசுறவன் அந்த வேலப்பன ஓங்கி ஒரு அடி அடிக்க வேண்டியதுதான - பக்கத்துல இருந்த ராமனின் கேள்வி. "அவன்தான் ப்ரெசிடெண்ட் கூட சேந்து ஆடிகிருகானே. அவன குத்திபுட்டு ஜெயிலுக்கு போயிறலாம். ஆனா நம்ம constable ராஜேந்திரனுக்கு பரோட்டா வாங்கி குடுக்க முடியாதுப்பா. எல்லோரும் சிரித்து விட்டு களைவதை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது. 100 நாள் வேலையில காலாங்கறைய செம்ம பண்ணிட்டாக, கம்மாயக்கு தண்ணி வந்தா தான காலங்கரைக்கு வேல. கிருச கெட்ட பயலுக -  ராக்காயி கொதிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. இது எல்லாம் ஒரு பக்கம். வயல்ல கால் வெக்க டீ, வடை, மக்கியதுகு சோறு கேட்குறாணப்பா, குமுறி கொண்டிருந்தது பொன்னம்மா புருஷன். 100 நாள் வேல வந்தப்புறம் வயிறு வலிக்க  தண்ணி கெடைக்குதே தவிர வயகாட்ல கூலிக்கு ஆள் கிடைக்கலையே - இது ஊரின் பெரிய பட்டாதாரான Minor குருசாமி யின் பொருமல். நெதம் சோறு போடுற பொண்டாடிகும்   என்னைக்காவது சோறு போட்ற வப்பாடிகும் வித்தியாசம் தெரியாம திரியுதே இந்த சனம். இப்படி ஊரே பேசிகொன்டிருக்க, ரா பொழுது கூடியது. தூரத்தில் இடி சத்தமும், மின்னல் வெளிச்சமும் கண்களை குத்தியது. வடக்க நல்ல மழை பெய்யும் என்ற சந்தோஷத்தில் ஊரே உறங்க சென்றது. சிற்றாறு சலசலப்புக்கு தயாரானது. 

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...